புனித ரஜப் மாதம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.


إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், (9:36)


 

புனித மாதங்கள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري, ومسلم). 

காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்று கொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஹழ்ரத் அபூபக்ரா (ரலியல்லாஹு அன்ஹு)  -- நூல் புகாரி – 3197, முஸ்லிம் - 1679

 

அறியாமை காலத்திலும் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:

அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனித மாதமாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனாலேயாகும்.

 

ரஜபு முழர்

மேலே குறிப்பிட்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ரஜப் முழர்' என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள்.

காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விஷயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர்.

ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பதும் ஒரு காரணமாகும்.

இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தனர், அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா என்ற  நூலில் கூறப்படுகிறது
 

ரஜப் மாதத்தின் சிறப்புகள்

ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துஆவை ஓதுவார்கள்.

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ

'அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழான'

(யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களை அடையச் செய்வாயாக) என்று நமது நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ . பைஹகீ ஃபீ ஷுஅபில் ஈமான்)


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

 رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي

'ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' (ஜமிவுஸ் ஸகீர் இமாம் ஜலாலுதீன் சுயூதி ரலியல்லாஹு அன்ஹு )


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار

'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' (அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தைலமீ)

 

ரஜப் மாதம் நோன்பு நோற்றல்

முஜீபதுல் பாஹிலிய்யா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவர்களது நிலை மாறியிருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் “என்னை நீங்கள் அறிய வில்லையா?” அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நீங்கள் யார்? என்றார்கள். நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன் என்றார்கள். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கேட்டார்கள்.

நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர்கள் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர்கள் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்' (அபூதாவுத், அஹ்மத்).

இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைப்பது சிறப்பிற்குரியது என  விளங்குகிறது.


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر

'ரஜப் போர் (புரியக்) கூடாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.' (அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தைலமீ, தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல் மஜ்மூஆ ஷவ்கானி, பக்: 439).


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار

'எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ அவரை விட்டு நரகத்தின் ஏழு வாயல்களும் மூடப்பட்டு விடும்' (அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்யீனுல் அஜப்,)


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வெண்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.' (அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)


 مَنْ صامَ يومًا مِنْ رجبٍ، وصلّى ركعتينِ، يقرأُ في كلِّ ركعةٍ مائةَ مرةٍ آيةَ الكرسيِّ، وفي الثانيةِ مائةَ مرةٍ ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ﴾ لمْ يمتْ حتّى يَرى مقعدَهُ مِنَ الجنةِ الراوي: - • ملا علي قاري، الأسرار المرفوعة (٤٣٩)

'ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, இரண்டு ரக்அத்துகள் தொழுது அதில் முதல் ரகஅதில் ஆயத்துல் குர்ஸி நூறுமுறையும்  இரண்டாவது  ரகஅதில் குல்ஹுவல்லாஹு அஹத்  நூறுமுறையும்  ஓதி தொழுவாரானால்,  அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்' (முல்லா அலீ காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஸ்ராருல் மர்ஃபூஆ)


إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة....

'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்'..... அறிவிப்பாளர் – அலி ரழியல்லாஹு அன்ஹு, நூல்- தப்யீனுல் அஜப் 

 

தொழுகை

من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ......قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب

'ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்'


ரஜபு மாதத்தின் விஷேச அமல்களில் சிறப்புத் தொழுகையும் உண்டு. அதற்கு வெகுவான வெகுமதிகளும் அதைப்பற்றி  நபிகள் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹழ்ரத் ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அந்த நீண்ட ஹதீஸின் நிறைவுப் பகுதியில் ஹழ்ரத் ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள்..

யாரசூலல்லாஹ்! எப்போது எப்படி அந்த தொழுகையை தொழுவது என அறிவியுங்கள் நாயகமே!

நபியவர்கள் சொன்னார்கள் ஸல்மானே!

ரஜபின் ஆரம்ப பத்து நாட்களில் ஒரு நாள் பத்து ரகஅத் தொழுவீராக(இரண்டிரண்டு ரக்அத்துக்களாக தொழும்) அத்தொழுகையின் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஒரு தடவை சூரத்துல் இக்லாஸ்(குல்ஹுவல்லாஹு அஹத்) மூன்று முறை சூரத்துல் காஃபிரூன்  மூன்று முறை ஓதி தொழுது முடித்தபின் இரு கைகைளையும் உயர்த்தி

என்று ஓதி இரு கைகளாலும் உம் முகத்தில் தடவிக் கொள்ளும்.

அப்படியே இரண்டாவது பத்திலும் தொழ வேண்டும் அதிலும் அப்படியே ஓதி தொழுது முடித்த பின் கைகளை உயர்த்தி மேலே உள்ள அதே கலிமாவை  'கதீர்'  என்பது வரை ஓதி முடித்த பின்

இலாஹன் அஹதன் ஸமதன் பர்தன் வித்ரன் லம் யத்தகித் ஸாஹிபதன் வலா வலதா

என்று ஓதி முகத்தில் இருகைகளையும் தடவிக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பத்திலும் அப்படியே ஓதி தொழுது முடித்து லாயிலாஹ தஸ்பீஹை'கதீர்' என்பது வரை ஓதி முடித்தபின்

வஸல்லல்லாஹு அலா செய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹித் தாஹிரீன் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அலீம்

என்று ஓதியபின்  உமது தேவைக்காக துஆச் செய்வீராக!

ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். இதைக் கூறி விட்டு நபியவர்கள் சென்ற போது நான் உடனே ஸஜ்தாவில் வீழ்ந்து அழுது துஆச் செய்தேன்.

 

ரஜப் மாதத்தில் குர்பான்

அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்: 

'அதீரத்' என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.

அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடும் போது:

நிச்சயமாக 'அதீரத்' என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுகள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்கள்.'

சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

 “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமழான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” ( நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)

இம்மாதத்தில் தான்  நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷிகளின் கொடுமை தாங்காது தவித்த முஸ்லிம்களில் 15 பேரை ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நஜ்ஜாஷி மன்னர் ஆட்சி செய்த அபிஷீனியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

 

பிறரின் கவலை களைதல்

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் இறைவனின் மாதமான இந்த ரஜபு மாதத்தில் யார் பிறரின் கவலையைக் களைந்து மகிழ்ச்சியுறச் செய்வாரோ அவருக்கு பிர்தௌஸ் எனும் உயர் சுவன பதியில் இறைவன் ஒரு மாளிகையை ஏற்படுத்துவான். அது அவரின் பார்வை போகும் வரை நீண்டதாய் இருக்கும். (நூல் குன்யா)


மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
ஆசிரியர் அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ்.


Keywords: Rajab